கடவூர் வட்டாட்சியர் ஜீப் கண்ணாடி கல் வீசி உடைப்பு: மது போதை இளைஞர்கள் 2 பேர் கைது @ கரூர்


கரூர்: கடவூர் வட்டாட்சியர் ஜீப் கண்ணாடியை கல் வீசி உடைத்த மது போதை இளைஞர்கள் 2 பேரை சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டாட்சியர் இளம்பரிதி. இவர் ஆதனூர் மேட்டுப்பட்டி துர்க்கை அம்மன் கோயில் திருவிழாவை இன்று (ஜூன் 12) மதியம் பார்வையிட்டு விட்டு ஜீப்பில் கடவூர் திரும்பிக் கொண்டிருந்தார். ஜீப்பை ஓட்டுநர் மரியலாரன்ஸ் ஓட்டி வந்தார்.

எருதுகோன்பட்டி அருகே வரும்போது சாலையில் மது போதையில் நின்ற 4 பேர் ஜீப்பை வழி மறித்து தகாத வார்த்தைகளால் வட்டாட்சியர் மற்றும் ஓட்டுநரை திட்டி, கல்லை எடுத்து வீசி ஜீப்பின் பின்புற கண்ணாடியை உடைத்தனர்.

இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸில் ஓட்டுநர் மரியலாரன்ஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸார் கொசூர் அருகேயுள்ள கம்பளியாம்பட்டியைச் சேர்ந்த வீரமணி (21) மற்றும் வெள்ள முத்து (18) ஆகிய இருவர் மீது தகாத வார்த்தைகளால் திட்டியது, கல் வீசி அரசு வாகனத்தை சேதப்படுத்தியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, பொதுச்சொத்தை சேதப்படுத்தியது என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.