8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவருக்கு 30 ஆண்டு சிறை @ மதுரை


மதுரை: மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், முதல் கணவரைப் பிரிந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்தார். முதல் கணவருக்கு 8 வயதில் மகள், 10 வயது மகன் உள்ளனர். இந்த இரு குழந்தைகளையும், அவரது தாய் வத்தல குண்டுவில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்துப் படிக்க வைத்தார். 2020-ல் கரோனா பரவலால் மகன், மகளை காப்பகத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், மனைவி வேலைக்குச் சென்ற நேரத்தில் செல்வகுமார் இரு குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, 10 வயது சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததும் அவரது தாய் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீ ஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, செல்வகுமாரை(32) கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல், குற்றம் சுமத்தப்பட்ட செல்வகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்டோர் நிதியிலிருந்து அரசு ரூ.6 லட்சம் இழப்பீட்டை சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.