8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவருக்கு 30 ஆண்டு சிறை @ மதுரை


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறுமியின் தாயாரின் 2-வது கணவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய மோனிஷா. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது முதல் கணவர் பிரிந்து சென்று 2-வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து செல்வகுமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு ஆணையூரில் குடும்பம் நடத்தி வந்தார் மோனிஷா. மகன், மகளை வத்தலக்குண்டு காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்தார். கடந்த 2020-ல் கரோன பரவல் காலத்தில் இருவரையும் காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ஆரோக்கிய மோனிஷா வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது மகன், மகள் மற்றும் செல்வகுமார் ஆகியோர் வீ்ட்டில் இருந்தனர். அப்போது செல்வ குமார் சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இது தெரியவந்ததும் ஆரோக்கிய மோனிஷா தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை (32) கைது செய்தனர்.

இந்த வழக்கை மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல் விசாரித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் ஜான்சிராணி வாதிட்டார். இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, செல்வகுமாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதிக்கப்பட்டோர் நிதியிலிருந்து அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

x