லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான வீட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு


காவல் நிலையம்

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான வீட்டில் ஏசி, மின் விசிறி உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் தி.நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தி.நகர் விஜயராகவா சாலையில் அந்த நகைக்கடைக்குச் சொந்தமான பழைய வீடு ஒன்று உள்ளது.

அந்த வீட்டில் யாரும் வசிக்காததால், கார்த்திகேயன் அடிக்கடி சென்று அந்த வீட்டை பராமரித்து வந்துள்ளார். அந்த வீட்டில் மெய்யப்பன் என்பவர் காவலாளியாக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், இன்று மெய்யப்பன் வீட்டின் கதவறுகே சென்று பார்த்த போது, வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்த போது வீட்டில் இருந்த 2 ஏசி, மின் மோட்டர், இரும்பு கேட், மின் விசிறி, பாதாள சாக்கடை இரும்பு மூடி, காப்பர் குழாய் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 9 பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக கார்த்திகேயனுக்கு மெய்யப்பன் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த கார்த்திகேயன், இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.