போடி காவல் நிலையத்தில் மூன்று பேருக்கு கத்தி குத்து: இருவர் கைது


திவாகர்

போடி: போடி காவல் நிலையத்தில் குடும்ப பிரச்னை தொடர்பான விசாரணையில் கணவர் தனது மனைவி உள்ளிட்ட 3 பேரை கத்தியால் குத்தினார். கணவர் மற்றும் அவரது தந்தையை கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் திவாகர் (32) இவருக்கும் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தாரணி (29) என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தாரணிக்கும் தேவாரத்தைச் சேர்ந்த அஜித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் திவாகருக்கும், மனைவி தாரணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏழு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தாரணியை காணவில்லை என அவரது தந்தை ஜெயக்குமார் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தாரணியும், அஜித்தும் மணக்கோலத்தில் போடி நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தாரணியின் தந்தை ஜெயக்குமார் மற்றும் தாரணியின் கணவர் திவாகர் ஆகியோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் தாரணி, அஜீத்துடன்தான் வாழ்வேன். கணவருடன் செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸார் திவாகரனிடம், தாரணியை தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த திவாகர் வெளியே சென்று கத்தி ஒன்றை வாங்கி வந்து காவல் நிலையத்திற்குள் இருந்த தாரணி, அஜித் ஆகியோரை போலீஸார் கண் முன்னே சரமாரியாக குத்தினார். மேலும், தடுக்கச் சென்ற தாரணியின் உறவினரான வைரமுத்து என்பவரின் வயிற்றில் சரமாரியாக குத்தியதில் அவரது குடல் வெளியேறி மயங்கி விழுந்தார். தாரணிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

மூவருக்கும் போடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். காவல் நிலையத்துக்குள் போலீஸார் கண் முன்பே நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து
திவாகர் மற்றும் அவரது தந்தை அழகரையும் போலீஸார் கைது செய்தனர்.