சென்னை விமானநிலையத்தில் ரூ.8.5 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல்: 2 பேர் கைது


சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 13.5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இலங்கை பயணி, தனியார் விமான நிறுவனர் ஊழியர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த 29 வயதான ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துவிட்டு, டிரான்சிட் பயணியாக இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க இருந்தார்.

விமான நிலையத்துக்குள் இருக்கும் டிரான்சிட் பயணிகள் தங்கி இருக்கும் அறையில் இருந்த அவரை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். இன்று காலை அந்த பயணி விமானத்தில் துபாய் செல்வதற்காக, பாதுகாப்பு சோதனை பகுதிக்கு வந்தார். அப்போது, தான் வைத்திருந்த ஒரு பார்சலை எடுத்து, தனியார் விமான நிறுவன ஊழியர் ஒருவரிடம் ரகசியமாக கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ஊழியரை மடக்கிப் பிடித்த விமானநிலைய அதிகாரிகள், அவர் வைத்திருந்த பார்சலை சோதனை செய்ததில், அதில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 13.5 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ஊழியரையும், இலங்கை பயணியையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை பயணி சர்வதேச தங்க கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர் உதவியுடன் சிங்கப்பூரில் இருந்து கடத்தி தங்கக் கட்டிகளை சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் சென்று, விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதனிடையே, தங்கத்தை வாங்கி செல்ல வந்த நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.