சென்னை கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


சென்னை: சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் வசந்தா. இவர் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வருகிறார்.

தினமும் காலை வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு வசந்தா வீடு திரும்புவார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு வசந்தா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் களைந்து கிடந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த ரூ.50,000 பணம் மற்றும் ரேஷன் கார்டு, ஏ.டி.எம் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் உள்ளிட்டவையும் மாயமாகி இருந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக வசந்தா போலீஸில் தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.