காரில் லிஃப்ட் கேட்டு நகை, பணம் பறிப்பு: சென்னையில் பெண் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை


சென்னை: சென்னையில் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி காரில் லிஃப்ட் கேட்டு ஏறிய பெண்ணும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அந்தக் காரின் உரிமையாளரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பக்ரி ரெட்டி (35). இவர் தனது காரில் வேளச்சேரியில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காமாட்சி மருத்துவமனை சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இவரது காரை வழிமறித்தார்.

காரை நிறுத்திய பக்ரி ரெட்டியிடம், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, மேடவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இறக்கி விடுமாறு அந்த பெண் லிஃப்ட் கேட்டுள்ளார். இரக்கப்பட்டு அந்தப் பெண்ணை பக்ரி ரெட்டி தனது காரில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார். அந்தப் பெண்ணுடன் அவர் காரில் வந்துகொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காரை பின் தொடர்ந்து வந்து திடீரென வழிமறித்தனர்.

ஆட்டோவில் இருந்த இறங்கிய மூன்று பேரும் காரில் அமர்ந்திருந்த பெண்ணும் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி பக்ரி ரெட்டி வைத்திருந்த செல்போன், ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை மற்றும் கார் சாவியை பறித்துக் கொண்டு நால்வரும் ஆட்டோவில் சென்று விட்டனர். இதுகுறித்து பக்ரி ரெட்டி பள்ளிக்கரணை போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.