செங்கல்பட்டு அருகே டைல்ஸ் பதிப்பவர் வீட்டின் முன்பு அரிவாளால் வெட்டி கொலை


கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே துஞ்சம் கிராமத்தில் வீட்டின் முன்பு உறங்கி கொண்டிருந்தவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீஸார் தேடுகின்றனர்.

செங்கல்பட்டு அருகே நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் ( 38). இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் ஜூன் மாதம் 7 ஆம் தேதி இரவு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். மனைவி செல்வி மற்றும் இரண்டு மகன்கள் வீட்டினுள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு 11:30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீட்டில் வெளியே உறங்கிக் கொண்டிருந்த யுவராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர் உள்ளனர். இதில் கழுத்து மற்றும் முகம் பகுதியில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யுவராஜின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகன்கள் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. கணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு மனைவி மகன்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் யார், என்ன காரணம் என்று, உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு வாசலில் தூங்கி இருந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.