சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.91 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.3.91 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

துபாயில் இருந்து பெரிய அளவில் தங்கம் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்திருந்தனர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 6 தங்கச் செயின்கள், 10 தங்கப் பசைகள் மற்றும் 7 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.3.91 கோடி மதிப்புள்ள 6 கிலோ 128 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 5 பேரும் பணத்துக்காக தங்கக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.