வீட்டில் சீரியல் பல்ப் பொருத்திய புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு @ மேற்கு மாம்பலம்


அகஸ்டின் பால்

சென்னை: மேற்கு மாம்பலத்தில் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டில் சீரியல் செட் பொருத்திய தொழிலதிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருமணமான 8 மாதத்தில் இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவனம் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). இவர் சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீர்த்தி. இவருக்கு நேற்று (வியாழக்கிழமை) 25-வது பிறந்தநாள். இதனைச் சிறப்பாக கொண்டாட முடிவு செய்த அகஸ்டின் பால், மாலை வீடு முழுவதும் சீரியல் பல்ப் அமைத்து அலங்காரம் செய்யும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் பால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகஸ்டின் பால், கீர்த்தி தம்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மனைவி கண் எதிரே மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.