பெங்களூருவில் இருந்து கும்பகோணம் கடத்தி வரப்பட்ட 230 கிலோ குட்கா பறிமுதல்


கும்பகோணம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கும்பகோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 230 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

கும்பகோணம் பெரியக் கடைத் தெருவில் அனுமதி இன்றி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கிழக்கு காவல் நிலைத்திற்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் சிவ செந்தில் குமார் மற்றும் போலீஸார், அந்த இடத்திற்குச் சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, முரளி (60) என்பவரது மளிகை கடையில் இருந்து, சரவணன் (40) மற்றும் முத்து (50) ஆகியோர் குட்கா புகையிலையை வாங்கிச் செல்வது தெரிந்தது.

அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட போது, முரளி குடோனில் 230 கிலோ தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் முரளியிடம் விசாரித்த போது, பெங்களூருவிலிருந்து, தனது கடைக்கு வரும் மளிகைப் பொருட்களுடன், குட்கா புகையிலை பொருட்களையும் கலந்து இங்கு கொண்டு வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து முரளிக்கு சொந்தமான குடோனில் இருந்து 230 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், முரளி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (40), கவரைத் தெருவைச் சேர்ந்த முத்து (54) ஆகிய மூவரை இன்று கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x