ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி


கோப்புப்படம்

கோவை: கோவை துடியலூர் அருகேயுள்ள, என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் ராஜீவ்குமார் (37). ஜவுளித் தொழில் செய்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர், கடந்த 18-ம் தேதி சென்னையில் நடந்த சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்தினருடன் நேரில் காண முடிவு செய்தார்.

இதற்கான டிக்கெட் பெறுவது குறித்து விசாரித்த போது, உறவினர் மூலம் திருப்பூரைச் சேர்ந்த ஜெபரூபன் என்பவர் அறிமுகமானார். அவர், தனக்கு தெரிந்த நபர்கள் மூலம், மேற்கண்ட அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து ராஜீவ்குமார், ரூ.1.50 லட்சம் தொகையை ஜெபரூபனிடம் கொடுத்தார். அவரும் தொகையை வாங்கிக் கொண்டார்.

அதன் பின்னர், பல்வேறு காரணங்களை கூறி மேலும் ரூ.14.50 லட்சம் தொகையை ராஜீவ்குமாரிடம் இருந்து வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி டிக்கெட் பெற்றுத் தரவில்லை. பணத்தையும் திரும்பித் தரவில்லை. அதன் பின்னரே, ஜெபரூபன் மோசடி நபர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, துடியலூர் போலீஸாரிடம் ராஜீவ்குமார் நேற்று (மே 31) புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் ஜெபரூபன் மீது மோசடி பிரிவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

x