கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் அடித்துக் கொலை: இளைஞர் கைது @ சென்னை


சென்னை: சுய உதவிக் குழு மூலம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால், பணம் கொடுத்த பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவர் காயத்திரி (29). இவரது கணவர் முருகன். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், காயத்திரி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவருக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.80 ஆயிரத்தை கடனாக கொடுத்துள்ளார். கடனை பெற்றுக் கொண்ட அஜித்குமார், கடந்த 2 மாதங்களாக தவணை பணத்தைக் கட்டாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், மே மாதம் 24-ம் தேதி காயத்திரி, அஜித்குமாரிடம் கடனைக் கட்டுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் அஜித்குமார், காயத்திரியை இரும்புக் கம்பியால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த காயத்ரி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த வண்ணாரப்பேட்டை போலீஸார், அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.