மது போதையில் காவலரை தாக்கிய இளைஞர் கைது @ சென்னை


சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில், மது போதையில் காவலரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொருக்குப்பேடை காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர் ரஞ்சித். இவர் நேற்று இரவு கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தண்டவாளம் அருகே 2 இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதைக் கண்ட காவலர் ரஞ்சித், “இங்கு மது அருந்தக்கூடாது, இங்கிருந்து முதலில் புறப்பட்டுச் செல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.

அப்போது, அந்த இளைஞரில் ஒருவர் காவல் ரஞ்சித்துடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். திடீரென காவலரை அந்த இளைஞர் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து, காவலர் ரஞ்சித் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த போலீஸார், காவலர் ரஞ்சித்தை தாக்கிய அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொருக்குப்பேட்டை கோபால் ரெட்டி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (35) என்பதும், உடன் இருந்தவர் அவரது நண்பர் முனுசாமி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காவலரை தாக்கிய பிரகாஷை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.