வேடசந்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது


வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே காக்காதோப்பூர் கிராமத்தில் தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பெருமாள்(55). இவரது மகன் வெங்கடேசன்(30).

இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் வெங்கடேசனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வெங்கடேசன் தனது தங்கையுடன் தகராறு செய்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெருமாள், இதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேசன் அரிவாளை எடுத்து தந்தை பெருமாளை வெட்டியுள்ளார். மயங்கி விழுந்தவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வெங்கடேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.