பட்டா மாறுதலுக்கு ரூ.1,000 லஞ்சம்: பாப்பிரெட்டிபட்டியில் விஏஓ கைது


லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர் கதிரவனை விசாரணைக்கு அழைத்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். (ப்ளு கட்டம் போட்ட சட்டை அணிந்திருப்பவர்)

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபாடி அருகே பட்டா மாறுதலுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கதிரவன் கைது செய்யட்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டத்துக்கு உட்பட்ட குருபர அள்ளி வருவாய் கிராம விஏஓ-வாக இருப்பவர் கதிரவன் (வயது 40). இவரிடம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட குருபர அள்ளி வருவாய் கிராமத்தைச் சார்ந்த சுதாகர் (38) என்பவர் தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு 28-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.

அதன்படி பட்டா மாறுதல் செய்துகொடுக்க அந்த கிராமத்தின் விஏஓ-வான கதிரவன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க சம்மதிக்காத சுதாகர், இது குறித்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் தருமபுரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீஸார் ரசாயனம் கலந்த 2 ஐநூறு ரூபாய் நோட்டுகளை சுதாகரிடம் கொடுத்து விஏஓ கதிரவனுக்கு கொடுக்க திட்டமிட்டனர். இன்று காலையில் விஏஓ கதிரவன் தென்கரைக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் வைத்து சுதாகரிடம் இருந்து அந்த ஆயிரம் ரூபாயை வாங்கிய போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கதிரவனை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது தென்கரைக் கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து, கதிரவனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x