புரோக்கர் கமிஷனுக்காக நடந்த தகராறில் ராணுவ வீரரின் தந்தை கொலை @ திருமங்கலம்


திருமங்கலம்: திருமங்கலம் அருகே புரோக்கர் கமிஷனுக்காக நடந்த சண்டையில் ராணுவ வீரரின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கப்பலூர் பழக்காபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி (58). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி மகேஸ்வரி(49). இவர்களுக்கு ரஞ்சித் என்ற மகனும், சந்தியா, சரண்யா என்ற மகள்களும் உள்ளனர். ரஞ்சித் பீகாரில் ராணுவத்தில் பணிபுரிகிறார். மகள் சரண்யாவின் கணவர் கணேசன் சத்தீஸ்கரில் ராணுவ வீரராக உள்ளார். குருசாமி வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்துள்ளார்.

சமீபத்தில், குருசாமி கப்பலூரில் கட்டிய ஒரு வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அதே ஊரிலுள்ள புரோக்கர் மாயவதரனிடம்(39) கூறியுள்ளார். மாயவதரன் சிலரை அழைத்து வந்து வீட்டை காட்டி விலை பேசியுள்ளார். ஒருவருக்கு வீடு பிடித்து போகவே அதனை வாங்கியுள்ளார்.

ஆனால் புரோக்கர் கமிஷனை பேசிய படி, மாயவதரனுக்கு குருசாமி முழுமையாக கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று (மே 28) இரவு மாயவதரன், அவரது நண்பர் கப்பலூரைச் சேர்ந்த செல்லபாண்டி ஆகியோர் குருசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். கமிஷன் தொடர்பாக பேசும்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சேர்ந்து குருசாமியை கீழே தள்ளியுள்ளனர்.

இதில் மயக்கம் அடைந்த குருசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். திருமங்கலம் போலீஸார் மாயவரதன் உள்ளிட்டோர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.