திருப்பூரில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.2,000 லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது


திருப்பூர்: திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம் ரங்க கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா. காய்கறி வியாபாரி. இவரது தந்தை ராஜேந்திரன் கடந்த பிப்ரவரியில் உயிரிழந்தார். இதையடுத்து முதலமைச்சர் நிவாரண நிதி பெற, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக நல்லூர் நில வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் ஜீவா.

முதல் முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2-ம் முறை ஜீவா மீண்டும் விண்ணப்பித்தார். அப்போது இவரது விண்ணப்பத்தை அங்கீகரித்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு வருவாய் ஆய்வாளர் மைதிலி ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

காய்கறி வியாபாரம் செய்யும் தன்னால் அவ்வளவு தொகை தர முடியாது என ஜீவா தெரிவித்ததை தொடர்ந்து ரூ.2 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார் மைதிலி. இதில் அதிர்ச்சியடைந்த ஜீவா லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கவுசல்யா தலைமையிலான போலீஸார் ஜீவாவிடம், ரசாயனம் தடவப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கி உள்ளனர்.

இதையடுத்து, இன்று நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்ற ஜீவா, மைதிலியிடம் ரூ.2 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மைதிலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். வாரிசு சான்றிதழ் பெற ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.