பிரபல பாடகி உஷா உதுப் கணவர் மாரடைப்பால் காலமானார்!


பிரபல பின்னணிப் பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ (78) மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

தமிழ், இந்தி உட்பட 17 இந்திய மொழிகள் மற்றும் 8 சர்வதேச மொழிகளில் பல பாடல்களைப் பாடி ரசிகர்களிடையே பிரபலமானவர் பாடகி உஷா உதுப். இந்த ஆண்டு அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாடகி உஷா உதுப் முதலில் ராமு என்பவரைத் திருமணம் செய்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தார். பின்னர், கோட்டயத்தைச் சார்ந்த ஜானி சாக்கோ என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் தேயிலைத் தோட்டத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். இந்த தம்பதியருக்கு சன்னி என்ற மகனும், அஞ்சலி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று கொல்கொத்தாவில் வீட்டில் இருந்த போது ஜானிக்கு அசெளகரியம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்ததாக பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜானி சாக்கோவின் இறுதி சடங்குகள் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. உஷா உதுப் குடும்பத்தினருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.