[X] Close

இரும்புத்திரை - இது சிவாஜி படம்


sivajiyin-irumbuthirai

  • வி.ராம்ஜி
  • Posted: 09 May, 2018 16:03 pm
  • அ+ அ-

ஒரேசமயத்தில் தமிழிலும் ஹிந்தியிலும் படமெடுக்கவேண்டும் என விரும்பினார் எஸ்.எஸ்.வாசன். ‘பைகாம்’ என்று ஹிந்திப்படத்துக்குப் பெயர் வைத்துவிட்டார். தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்று தன் ஊழியர்களிடம் கேட்டார்.

ஒரு பேப்பரில் எழுதிக் கொடுங்கள் என்று சொல்ல, ஒவ்வொருவரும் பெயரை எழுதிக்கொடுத்தார்கள். ஸ்டூடியோவில் உள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய விருந்து வைத்தார் எஸ்.எஸ்.வாசன். அந்த விருந்துக் கொண்டாட்டத்தின் போது, அவர்கள் அனுப்பிய தலைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

‘இந்தத் தலைப்பே பிரமாதமாக உள்ளது’ என்று ஊழியர் ஒருவர் முன்மொழிந்து சொல்ல, எல்லோரும் கைத்தட்டி உற்சாகமானார்கள். அப்படி முன்மொழிந்து சொன்ன ஊழியரை அழைத்துப் பாராட்டி, பரிசும் கொடுத்தார் எஸ்.எஸ்.வாசன். அதுதான்... இரும்புத்திரை!

தொழிற்சாலை, முதலாளி, தொழிலாளர்கள், ஏகாதிபத்தியம்தான் கதைக்களம். ‘கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல’ எனும் ஒரு மிடில்கிளாஸ் தொழிலாளரின் கவலையையும் துக்கத்தையும் சொன்ன ஹிட்டான பாடல் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான்.

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நாயகன். எஸ்.வி.ரங்காராவ் முதலாளி. நடிப்பில் யார் பணக்காரன் என்று இருவருக்கும் நடக்கும் போட்டி, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். ஏற்கெனவே இரண்டு படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைந்த நிலையில், இரும்புத்திரை சிவாஜிக்கு ஹாட்ரிக் ஹிட்டானது.

வைஜெயந்திமாலாதான் நாயகி. வசுந்தராதேவிதான் அம்மா. ஆமாம்... படத்திலும் இருவரும் அம்மாவும் மகளுமாக நடித்திருப்பார்கள். தவிர, சரோஜாதேவியின் குறிப்பிடத்தக்க நடிப்பும், படத்துக்கு இன்னும் வலு சேர்த்தது. ‘நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் உரைக்கும்...’ பாடல், அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமான ஆல்டைம் லவ் ஸாங். அப்போது இந்தப் பாடலைக் கேட்டு கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள்.

கூடவே வைஜெயந்தி மாலாவின் கண்களிலும் சரோஜாதேவியின் சிரிப்பினிலும் மயங்கிய ரசிகர்கள், இரண்டாவது மூன்றாவது முறையாகவும் இரும்புத்திரையைப் பார்த்தார்கள். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை.

1960ம் வருடம் ஜனவரி 14ம் தேதி ரிலீசான படம், சக்கைப்போடு போட்டது. எஸ்.வி.சுப்பையாவின் நடிப்பும் தங்கவேலுவின் காமெடியும் பேசப்பட்டன. தில்லானா மோகனாம்பாள் எழுதிய கொத்தமங்கலம் சுப்புதான், படத்துக்கு கதை எழுதியிருந்தார். மேலும் படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியிருந்தார். பாபநாசம் சிவனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் மீதமுள்ள பாடல்களை எழுதி, ஹிட்டாக்கியிருந்தார்கள். டி.எம்.எஸ்., பி.லீலா, சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் என்று ஒவ்வொரு ரகத்துடன் இருந்த பாடல்கள் அனைத்துமே கற்கண்டு.

ஜெமினியின் சார்பில் படத்தைத் தயாரித்ததுடன் இயக்கவும் செய்திருந்தார் வாசன்.

’கையில வாங்கினேன் பையில போடலை... காசு போன இடம் தெரியல...’ என்கிற இரும்புத்திரையின் பாடலை இப்போது கேட்டாலும் சொல்லுவார்கள்...’இப்போதும் அதாம்பா நிலைமை’ என்று!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close