‘இந்தியன் 2’ படத்துக்காக கமல் எடுத்த ரிஸ்க் - இயக்குநர் ஷங்கர் பகிர்வு


ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாயாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் பேசியது: "போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. என்னுடைய படங்கள் எல்லாமே இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற கான்செப்ட் தான். இந்தியன் தாத்தா இப்போது வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. ’இந்தியன்1’ கதை தமிழ்நாட்டில் நடக்கும். ஆனால், 'இந்தியன் 2' தமிழ்நாடு தாண்டி பல மாநிலங்களுக்கும் நகர்ந்திருக்கிறது. படம் முடிந்ததும் எல்லோரையும் யோசிக்க வைக்கும். இந்தப் படம் சிறப்பாக வர காரணம் கமல் சார்தான்.

முதல் பாகத்தில் 40 நாட்கள் தான் கமல் சாருக்கு மேக்கப் போட்டோம். ஆனால், 'இந்தியன்2'வில் 70 நாட்கள் மேக்கப் போட்டோம். மேக்கப் போட 3 மணி நேரம், கலைக்க 1 மணி நேரம் ஆனது. சாப்பாடும் வெறும் நீராகரம்தான். 28 வருடங்களுக்கு முன்பு கமல் சாரை அந்த மேக்கப்பில் பார்த்த போது சிலிர்ப்பு வந்தது. 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் தாத்தா மேக்கப் போட்டு அவரைப் பார்த்தபோதும் அதே சிலிரிப்பு வந்தது. மேக்கப் இன்னும் அட்வான்ஸாக இருப்பதால் ’நடிகர்’ கமலை இன்னும் நீங்கள் இதில் பார்க்கலாம். ரிஸ்க்கான ஆக்‌ஷன் காட்சிகள், ரோப்பில் தொங்குவது போன்ற காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். நான் இயக்குநர் என்பதைத் தாண்டி நானும் ஒரு ஆடியன்ஸாக கமல்ஹாசனை அவ்வளவு ரசித்தேன்.

நான் எதிர்பார்த்ததை விட அனிருத் சிறப்பான இசை கொடுத்துள்ளார். இந்தக் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்த தயாரிப்பாளருக்கு சுபாஸ்கரனுக்கு நன்றி. ரவி வர்மன் அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த், பாபி, எஸ்.ஜே.சூர்யா என பலரும் சிறப்பாக நடித்துள்ளார். விவேக் சாருக்கு இந்தப் படத்தில் சிறப்பான கதாபாத்திரம். அவர் வரும்போது நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பார்ட் 1 போல இரண்டாம் பாகத்தையும் வெற்றிப் பெற வையுங்கள்" என்றார்.