திரை விமர்சனம்: மகாராஜா


சலூன் வைத்திருக்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி). ஒரே மகள் ஜோதி (சச்சனா நேமிதாஸ்), தடகள வீராங்கனை. அப்பாவும் மகளும் ஒருவர் மீது ஒருவர் உயிரை வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே தனது குப்பைத் தொட்டி திருடப்பட்டுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் மகாராஜா. அவரை ஏளனம் செய்யும் காவல்துறை அவர் லஞ்சம் தருவதாகச் சொன்னதும் அதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறது. மகாராஜா, காவல்துறையிடம் சென்றது குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிக்கத்தானா? காவலர்கள் அவர் நோக்கத்தைக் கண்டுபிடித்தார்களா? மகாராஜாவுக்கும் அவர் மகள் ஜோதிக்கும் என்ன ஆகிறது? என்பது உட்பட பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

‘குரங்கு பொம்மை’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருக்கும் படம். விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமும் கூட. பழிவாங்கும் கதையை அபாரமான ‘நான் லீனியர்’ திரைக்கதையால் இறுதிவரை சுவாரசியத்துடன் கொண்டு சென்றிருப்பதன் மூலம், ஒரு படத்துக்கு திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறார் நித்திலன். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கதையின் பலத்தால் உயர்ந்து நிற்கும் படத்தைக் கொடுத்திருப்பதற்காகவே அவரைப் பாராட்டலாம்.

தொடக்கத்தில் பல கதாபாத்திரங்கள், வெவ்வேறு சூழல்கள் என மாறி மாறி காண்பிக்கப்படும்போது என்ன சொல்ல வருகிறார்கள் எனறு தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகள் அவிழும்போது ஆச்சரியங்கள் வந்து அசத்துகின்றன. குறிப்பாக இடைவேளையில் நிகழும் நாயகனின் ‘ட்ரான்ஸ்ஃபார்மேஷன்’ திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகிறது. அதற்கு இணையாக இறுதிப் பகுதியில் இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு நிகழும் ‘ட்ரான்ஸ்ஃபார்மேஷனு’ம் அதே அளவு கைதட்டலை அள்ளுகிறது. இடையே நாயகனை ஏமாற்ற, குப்பைத்தொட்டியை தயாரிக்கும் முயற்சிக்குத் தேவைக்கு அதிகமான காட்சிகள் ஒதுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இறுதியில் அதுவேகதையின் அடிநாதமான திருப்பத்தைக் கொண்டுவரும்போது அத்தகைய விரிவான காட்சிகளுக்கான நியாயத்தை உணர முடிகிறது.

திரைக்கதையில் தர்க்கப் பிழைகளும் இல்லாமல் இல்லை. மகாராஜா, குப்பைத் தொட்டி தொலைந்துவிட்டதாக ஏன் சொல்கிறார் என்பதற்கு வலுவான காரணம் இல்லை. அதேபோல் குழந்தைகள் பார்க்கவே கூடாத அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் உள்ளன. பாலியல் வன்முறை தொடர்பான காட்சிகளை கூடுதல் பொறுப்புணர்வுடன் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

குறைவாக பேசி கண்களாலும் உடல்மொழியாலும் உணர்வுகளைக் கடத்தும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வழக்கம்போல் அசத்துகிறார். அவர் மகளாக சச்சனா நேமிதாஸ் சுயசார்பும் அப்பாவின் மீது அன்பும் சக மனிதர்கள் மீது அக்கறையும் கொண்ட பதின்பருவப் பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறார். கொடூர கொள்ளைக்காரனாக அனுராக் காஷ்யப், அவர் மனைவியாக அபிராமி, காவல்துறை ஆய்வாளராக நட்டி, பிற காவலர்களாக அருள்தாஸ், முனீஸ்காந்த், காவலர்களுக்கு உதவுபவராக சிங்கம்புலி என துணைக் கதாபாத்திரங்கள் பாராட்டும் வகையிலான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ‘பாய்ஸ்’ மணிகண்டன் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.

மம்தா மோகன்தாஸின் கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் அவருக்கான காட்சிகள் குறைவு. பாரதிராஜாவுக்கும் கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அஜ்னீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை கதைக்குத் தேவையானதைத் தந்துள்ளது. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கதையின் மர்மத்தன்மைக்கு ஏற்ற இருண்மையைப் பதிவு செய்திருக்கிறது. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, ‘நான் – லீனியர்’ திரைக்கதைக்குத் துணைபுரிந்திருக்கிறது.

சில குறைகள் இருந்தாலும் திரைக்கதைதான் ‘ராஜா’ என்பதை அழுத்தமாக உணர்த்தி இருப்பதற்காகவே இந்த ‘மகாராஜா’வை வரவேற்கலாம்.