இந்தி நடிகை சடலமாக மீட்பு


இந்தி நடிகை நூர் மலாபிகா தாஸ், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமை சேர்ந்த நூர் மலாபிகா தாஸ் (37), கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு நடிப்புக்குத் திரும்பிய அவர், மும்பை லோகண்ட்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கஜோல் நடித்து கடந்த வருடம் வெளியான ‘தி டிரெயல்’ வெப் தொடரில் அவருடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் துர்நாற்றம் வீசியதால், குடியிருப்பு வாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அழுகிய நிலையில் நூர் மலாபிகா தாஸின் உடல் கிடந்தது. அதைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அவர் செல்போனை கைப்பற்றிய போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நூர் மலாபிகா தாஸின் உடல் அவர் நண்பரும் நடிகருமான அலோக்நாத் பதக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இறுதிச்சடங்கை மேற்கொண்டார்.