அமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை: சுரேஷ் கோபி மறுப்பு


மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன்மூலம் கேரளாவில் வெற்றி பெற்ற முதல் பாஜக எம்.பி. என்ற சாதனை படைத்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுரேஷ் கோபி இணையமைச்சராக பதவியேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் எந்தப் பதவியையும் கேட்கவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன். விரைவில் இப்பதவியிலிருந்து விடுபடுவேன் என நினைக்கிறேன். நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி சில படங்களில் நடிக்க வேண்டி உள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் இதுகுறித்து முடிவு செய்வார்கள்” என்றார்.

இந்நிலையில், சுரேஷ் கோபி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அமைச்சரவையிலிருந்து நான் விலகப் போவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் கேரளாவின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.