‘தோனிமா’ படத்தில் கிரிக்கெட் ரசிகராக காளி வெங்கட்


காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தோனிமா’. ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இவர் சிகை, பக்ரீத் படங்களை இயக்கியவர். படத்தை சாய் வெங்கடேஷ்வரன் தயாரிக்கிறார். பாக்யராஜ், சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜான்சன் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ஜெகதீசன் சுப்பு கூறும்போது, “இது எளிய மக்களின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்ட படம். வீடுகளில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றும் தனம் என்ற கதாபாத்திரத்தில் ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். கட்டிட வேலை பார்ப்பவராக வரும் காளிவெங்கட், தீவிர கிரிக்கெட் ரசிகர். தனது மகனுக்கும் கிரிக்கெட் வீரரின் பெயரை வைத்திருக்கிறார். இதில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. அந்தச் செல்ல நாய்க்கு தோனி என்று பெயர் வைக்கிறார்கள். அது பெண் நாய் என்று தெரிந்ததும் அதை தோனிமா என்று அழைக்கிறார்கள். சென்னை கொளத்தூர் பகுதியில் நடக்கும் யதார்த்தமான கதை. படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.