திரை விமர்சனம்: ஹரா


ஹரா படத்தில் மோகன்

ஊட்டியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் ராம் (மோகன்). அவருடைய ஒரே மகள் நிமிஷா (சுவாதி), கோவை கல்லூரியில் படிக்கிறார். ஒரு நாள், திடீரென அவர் தற்கொலை செய்து கொள்ள, நிலைகுலைந்து போகும் மோகன், மகள் தற்கொலைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய, விசாரணையில் இறங்குகிறார்.

இதற்கிடையே அவரை சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி தலைமையிலான டீம் தேடுகிறது. இந்தத் துரத்தலுக்கு இடையே சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் பல்வேறு உண்மைகள் மோகனுக்குத் தெரிய வருகிறது. அதை அவர் எப்படி கையாண்டார்? மோகனை போலீஸார் ஏன் துரத்துகின்றனர் மகள் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தாரா? என்பது கதை.

முதல் காட்சியிலேயே கள்ளத் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக மோகன் சுற்றுவதும், அவரை போலீஸ் துரத்துவதும் ஒரு த்ரில்லிங்கான திரைக்கதைக்குள் பயணிக்கப் போகிறோம் என்கிற உணர்வைத் தருகிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில்தான் மகள் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கச் செல்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று தெரியவில்லை.

படத்தின் தொடக்கத்தில் வரும் இந்த ஏமாற்றம் இறுதிவரை தொடர்வது பெரிய பலவீனம். மகளின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய விரும்பும் தந்தையின் கதை என்கிற ஒன் லைனுக்கு பக்காவாகத் திரைக்கதை எழுதியிருந்தால் கூட படம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கும்.

எளிமையான, குடும்ப பின்னணி கொண்ட கதையில் தீவிரவாதிகள், மதநல்லிணக்கம், போலி மருந்து, அரசியல் பின்னணி என டன் கணக்கில் பாரத்தை ஏற்றியிருக்கிறார் இயக்குநர் விஜய் ஜி. மோகனின் பழைய படங்களின் பெயர்கள், பாடல்களை இடையிடையே நினைவுப்படுத்துவதில் காட்டியிருக்கும் அக்கறையை மேக்கிங்கில் காட்டியிருக்கலாம்.

மகளுக்கும் - தந்தைக்குமான அபரிமிதமான அன்பை கூட தெளிவாகப் பதிவு செய்யவில்லை . மோகனை பழிவாங்கச் சுற்றும் சஸ்பெண்ட் போலீஸாரின் பின்னணிக் கதை தலைச்சுற்ற வைக்கிறது. ஒரு கட்டத்தில் அதிகாரப் பலத்துடன் பெரிய குற்றப் பின்னணி உள்ளவர்களை மோகன் டீல் செய்யும் காட்சிகள் சோர்வடைய செய்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் மோகன் தான் படத்தின் பலம். சொந்தக்குரலில் பேசி நடித்திருக்கும் அவர், இயக்குநர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். அவர் மனைவியாக வரும் அனுமோள் சிறப்பாகவே நடித்திருக்கிறார். யோகிபாபு எதற்கு வந்தார் என்றே தெரியவில்லை .

மகளாக வரும் சுவாதி, காதலன் சந்தோஷ் பிரபாகர், அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், பழ. கருப்பையா, மைம் கோபி, சிங்கம்புலி, சாய் தீனா என ஏகப்பட்ட நடிகர் பட்டாளம். படத்துக்கு இசை ரஷாந்த் அர்வின். தீம் மியூசிக்கில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார். மனோ தினகரன், பிரஹாத் முனியசாமி, விஜய் ஜி ஒளிப்பதிவில் குறையில்லை. சொதப்பலான காட்சிகளுக்குப் படத்தொகுப்பாளர் குணா கத்திரி போட்டிருக்கலாம்.

x