‘கந்தர்வ குரல்’ டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா: ஜூன் 15-ல் சோழவந்தானில் நிகழ்வு


டி.ஆர்.மகாலிங்கம்

மதுரை: பிரபல நடிகரும், பாடகருமான ‘கலைமாமணி' டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா மதுரை அருகே அவர் பிறந்த ஊரான சோழவந்தானில் ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகில் 60 ஆண்டு களுக்கு முன்பு பாடக நடிகர் என்று புகழ்க் கொடி நாட்டிய எஸ்.ஜி.கிட்டப்பாவின் இசை வாரிசு என புகழ் பெற்றவர் டி.ஆர். மகாலிங்கம். மதுரை அருகே சோழவந்தான் தென்கரையில் நிலச்சுவான்தார் ராம கிருஷ்ணனின் 3-வது மனைவிக்கு பிறந்தவர் டி.ஆர். மகாலிங்கம். வேதபாட சாலைக்கு அனுப்பப்பட்ட மகாலிங்கத்துக்கு, பாடம் பதியவில்லை. மனசு முழுக்க பாட்டுதான் பரவிக் கிடந்தது. ஏ.வி. மெய்யப்பனின் ‘நந்தகுமார்’ படத்தில் சிறு வேடத்தில் கிருஷ்ணராக நடித்தார்.

அப்படம் தந்த அறிமுகத்தால், ‘பக்த பிரகலாதா', ‘சதிமுரளி', ‘பரசுராமர்', ‘பூலோக ரம்பை' எனத் தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். ஆனால், சொல்லிக் கொள்ளும் படியாக வேடம் கிடைக்கவில்லை. 1945-ம் ஆண்டு டி.ஆர். மகாலிங்கத்துக்கு திருப்புமுனையாய் அமைந்தது. ஏ.வி. மெய்யப்பன் ‘வள்ளி' என்ற ஜனரஞ்சகமான படத்தை எடுத்தார். பட்டி தொட்டியெங்கும் 55 வாரங்கள் ஓடிய அந்த படத்துக்கு பிறகு திரையுலகில் புகழின் உச்சிக்கே போய் விட்டார் மகாலிங்கம். அந்த காலத்திலேயே 23 வயதில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார்.

1948-ல் அவர் நடித்த மற்றொரு வெற்றிப்படம் ஞான சவுந்தரி. 1950-களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பெரிய நடிகர், படத்தயாரிப்பாளர் என வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லா வற்றையும் இழந்து மஞ்சள் கடிதம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார். கீழே விழுந்த மகாலிங்கத்தைத் தூக்கி நிறுத்தினார் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசன் தான் சொந்தமாகத் தயாரித்த முதல் படமான ‘மாலையிட்ட மங்கை'யில் துணிந்து மகாலிங்கத்தை நாய கனாக ஒப்பந்தம் செய்தார். அதில் இடம் பெற்ற ‘செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது.

நூற்றாண்டு விழா: அத்தகைய பெருமைமிகு நடிகருக்கு டி.ஆர்.மகாலிங்கம்- கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை சார்பில், நூற்றாண்டு விழா ஜூன் 15-ம் தேதி சோழவந்தான் அருகே தென்கரையில் நடக்கவுள்ளது. அன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கும் விழாவில், மங்கல இசையை பல்வேறு இசைக்கலைஞர்கள் வழங்குகின்றனர். பின்னணி பாடகி பி.சுசீலா குத்துவிளக்கு ஏற்றுகிறார். நூற்றாண்டு விழாவை நல்லி குப்புசாமிசெட்டி தொடங்கி வைக்கிறார்.

காலை 10 மணிக்கு டிஆர்.மகாலிங்கத்தின் உருவச் சிலையை நடிகர் ராதா ரவி திறந்துவைக்கிறார். மூத்த வழக்கறிஞர் டி.கே.கோபாலன், நடிகர் நாசர், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நடிகர் சங்க நிர்வாகி பூச்சி எஸ்.முருகன், நடிகர்கள் ராஜேஷ், அண்ணாதுரை கண்ணதாசன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நடிகர்கள், பாடகர்கள், பட்டிமன்ற நடுவர்கள், சினிமா இயக்குநர்கள், விருதாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.