அஞ்சாமை யாருக்கும் எதிரான படம் அல்ல: இயக்குநர் தகவல்


விதார்த், வாணி போஜன், வி ரஹ்மான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'அஞ்சாமை', எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ளார்.

கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ள இந்தப் படத்தை வரும் 7-ம் தேதி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் கூறும்போது, "பெற்றோர்கள் தனது குழந்தை சான்றோனாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதற்கு கல்வி முக்கியம்.

அந்தக் கல்வி தற்போது எந்த நிலையில் இருக்கிறது. அதற்காக பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை இந்தப் படம் பேசி இருக்கிறது. இந்தப் படத்துக்காக, மம்மூட்டியிடம் நடிக்க கேட்டேன். சம்மதித்தார். கால்ஷீட் கிடைக்க 2 மாதம் ஆகும் என்றதால் அவர் நடிக்க இயலவில்லை. அந்த இடத்துக்கு ரஹ்மான் வந்தார். இது யாருக்கும் எதிரான படம் அல்ல. மக்களின் வலியை சொல்லி இருக்கிறோம்" என்றார்.