புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் இஸ்கான் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைதுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் இந்துக்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மீதும் கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை கண்டித்து வங்கதேச இஸ்கான் அமைப்பின் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி தலைமையில் அமைதி வழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சூழலில் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மாச்சாரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அவரை விடுதலை செய்யக் கோரி சிட்டகாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு நேற்று பெருந்திரளான இந்துக்கள் திரண்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சின்மய் கிருஷ்ணதாஸை விடுதலை செய்யக் கோரி வங்கதேசம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் மத்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. இதை கண்டிக்கிறோம். வங்கதேசத்தில் இந்துக்கள் மற்ம் இதர சிறுபான்மையினர் மீது சமூகவிரோத கும்பல்கள் பல்வேறு தாக்குல்களை நடத்தி வருகின்றன. சிறுபான்மையினரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
ஆனால் அமைதி வழியில் போராடும் இஸ்கான் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது கைதை எதிர்த்து அமைதி வழியில் போராடும் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்து கொள்கிறோம். வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள், இதர சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.