ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான தாக்குதல் கோழைத்தனமானது, கொடூரமான செயல் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ (59). இவர் நேற்று தலைநகர் ப்ராகுக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹாண்ட்லோவா நகரில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்லோவாக்கியா பிரதமர் எச்.இ. ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். ஸ்லோவாக்கியா குடியரசு மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.