தெற்கு பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புக்கு அங்கு 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டே டோ சுல்-லில் கடந்த இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரைகளை உடைத்துக் கொண்டு வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ளது.
அங்கு கன மழை, வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 132 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ரியோ கிராண்டே டோ சுல்-லில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என அந்நாட்டு வானிலை சேவை மையமான 'மெட்சுல்' தெரிவித்துள்ளது.
அங்கு 2 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் வெள்ள பாதிப்பை 'எல் நினோ' வானிலை நிகழ்வால் தீவிரமடைந்த காலநிலை மாற்றத்துடன் நிபுணர்கள் தொடர்புபடுத்துகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாகாணத்தின் அனைத்து முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயரும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.