ஒரே நாளில் 200-க்கும் மேலானோர் பலி... பெண்கள், குழந்தைகளை அதிகம் பலிகொண்ட ஆப்கானிஸ்தான் கனமழை


கனமழையால் சேதமடைந்த இருப்பிடங்களை காலி செய்யும் ஆப்கன் மக்கள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மேகவெடிப்பு மழை காரணமாக ஒரே மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

வடக்கு ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக எழுந்த திடீர் வெள்ளம் குறைந்தது 200 உயிர்களைக் கொன்றதாக ஐநா சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக பாக்லான் மாகாணத்தின் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

தாலிபன் தரப்பு அதிகாரியான ஹெதயதுல்லா ஹம்தார்ட், முதற்கட்ட கணக்கின்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் என 62 பே கனமழையால் பலியானதை உறுதி செய்தார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் ஹம்தார்ட் தெரிவித்துள்ளார். "தேசிய இராணுவம் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய மீட்பு படையினர் சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்தார். சேற்றில் மூழ்கிய குழந்தைகள் மீட்கப்படும் வீடியோக்கள் இணையத்தை அதிரச் செய்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் கனமழையில் இருந்து விடுபடவில்லை பாக்லானை உலுக்கிய அளவுக்கு வெள்ளம் இல்லாதபோதும், தலைநகர் அதன் தனிப்பட்ட வெள்ளத்தில் தத்தளித்தது. இதனை தாலிபனின் இயற்கை பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சாய்க் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கைகளின் ஊடே பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் மத்தியில், இந்த உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பது ஐநா அமைப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் அடிப்படையில் காலநிலை உணர்திறன் கொண்ட தேசமாகும். அங்கு கடந்த மாதத்தில் இதேபோன்ற பேரழிவுகள் ஏற்பட்டன. அப்போது கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 70 பேர் இறந்தனர். கடந்த மாத வெள்ளம் சுமார் 2,000 வீடுகள், மூன்று மசூதிகள் மற்றும் நான்கு பள்ளிகளை அழித்தது. மேலும் ஆயிரக்கணக்கானோருக்கான மனிதாபிமான உதவிகளை கோரியது. இவற்றோடு விவசாய நிலங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. 2,500க்கும் மேலான விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

x