கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பருவ நிலை அமைப்பு தெரிவித்துள்ளது சுற்றுசூழல் ஆர்வலர்களைப் பதற்றமடைய செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை நிறுவனமான 'கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை' (சி3எஸ்) அமைப்பு வெளியிட்ட தகவல்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து 11வது மாதமாக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 1850-1900 காலகட்டத்தில் மாத சராசரியான 15.03 டிகிரி செல்சியஸை விட இந்த ஆண்டு ஏப்ரலில் சராசரி 1.58 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இது 1991 – 2020 காலகட்ட சராசரியை விட 0.67 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும் கடந்த 2016 ஏப்ரலில் பதிவான முந்தைய அதிகபட்ச வெப்பநிலையை விட 0.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக நிகழாண்டு ஏப்ரலில் பதிவாகி உள்ளது.
'சி3எஸ்' அமைப்பின் இயக்குனர் கார்லோ பியூன்டெம்போ கூறுகையில், “கிழக்கு வெப்பமண்டல பசிபிக்கில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்ததால் எல் நினோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. இது இப்போது இயல்பு நிலைக்கு மாறுகிறது.
எல் நினோ போன்ற இயற்கை சுழற்சிகளுடன் தொடர்புடைய வெப்பநிலை மாறுபாடுகள் வந்து போகும்போது, வளிமண்டல வாயுக்களின் செறிவுகள் அதிகரிப்பதன் மூலம் கடல் மற்றும் வளிமண்டலத்தில் சிக்கியுள்ள கூடுதல் ஆற்றல் உலக வெப்பநிலையை புதிய சாதனைகளை நோக்கி தள்ளும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஓராண்டில் உலக சராசரி வெப்பநிலை - மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை, 1991-2020 சராசரியை விட 0.73 டிகிரி செல்சியஸ் மற்றும் 1850-1900 சராசரியை விட 1.61 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் உலக அளவில் பல்வேறு நாடுகளில் வெப்பம், மழை மற்றும் வெள்ளம் என மாறுபட்ட காலநிலைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துள்ளன. புவி வெப்பமடைவதால், பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல வருடங்களாக எச்சரித்து வரும் சுற்றுசூழல் ஆய்வாளர்கள், தற்போது உலகளவில் வெப்பநிலையும் உச்சமடைவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!
பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!