உலகம் முழுவதும் இந்தியா சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. நாங்கள் நிதி உதவிக்காக மட்டுமே கெஞ்சிக் கொண்டிருக்கிறோம் என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்),பிபிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இருப்பினும் சர்வதேச நாணய நிதியம்( ஐஎம்எஃப்) உதவியுடன் பொருளாதார ஸ்திரத்தன்மை விரைவில் அடைய முடியும் என பாகிஸ்தான் அரசு கருதி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் நிலையும், இந்தியா நிலையையும் விவரித்து அந்நாட்டு மக்கள் பேசும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இதில் இந்தியாவின் ஆட்சியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானும் இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், " உலக அளவில் வலிமையான நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. நாங்கள் நிதி உதவிக்காக மட்டுமே கெஞ்சுகிறோம்.
உலக அளவில் இந்தியா வல்லரசாக வளர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தான் மட்டும் திவாலாகி வருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் 1947-ல் சுதந்திரம் பெற்றன. இன்றைய இந்தியாவில் உள்ள மாநிலங்களின் நிலை எங்கே? நம் மாநிலங்களின் நிலை எங்கே? இதற்கெல்லாம் யார் காரணம்?" என்று கேள்வி எழுப்பினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து அதிருப்தி தெரிவித்த அவர்," என்ன மாதிரியான தேர்தல்? இங்கே தோற்றவர்கள் திருப்தியடையவில்லை, வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தற்போதைய ஆளும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஒழுக்கத்தை மறந்து நாட்டின் ஜனநாயக அமைப்பை விற்பனை செய்து வருகின்றனர். சுவர்களுக்குப் பின்னால் நம்மைக் கட்டுப்படுத்தும் சக்திகள் உள்ளன, நாம் வெறும் பொம்மைகளாக இருக்கும்போது அவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள்.
யார் பிரதமர் என்பதை அதிகாரத்துவம் தீர்மானிக்கிறது. நாம் எவ்வளவு காலம் இதற்கு சமரசம் செய்ய வேண்டும்? பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பதவி விலகி, பிடிஐ கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.