பாகிஸ்தானின் கராச்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் வருகிற ஏப்ரல் 29-ம் தேதி இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது.
குஜராத் மாநிலம் ஓகா பகுதியைச் சேர்ந்த வினோத் கோல் என்பவர் உட்பட 9 மீனவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படை அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவர்களுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு கராச்சி சிறையில் அனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பருடன் இவர்களுக்கான தண்டைக் காலம் முடிவடைந்த போதும், கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக வினோத் கோல் உட்பட அனைவரும் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 8-ம் தேதி சிறையில் வினோத் கோல் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஜின்னா மருத்துவ மையத்திற்கு சிறை அதிகாரிகள் கொண்டு சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த வினோத் கோல் மார்ச் 17ம் தேதி உயிரிழந்தார்.
அவர் இறந்துவிட்ட தகவல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளியே வராமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை வருகிற ஏப்ரல் 29-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 30-ம் தேதி 35க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில், வினோத் கோல் அங்கே உயிரிழந்திருக்கிறார். நடப்பாண்டில் பாகிஸ்தான் சிறையில் நிகழும் முதல் இந்தியரின் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...