ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் அருகே இன்று அதிகாலை இரு இடங்களில் ரிக்டர் அளவில் 4.4 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என். சி.எஸ்) தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் ஃபைசாபாத்தில் இருந்து 80 கி.மீ. ஆழத்திலும், 126 கி.மீ. மையத்திலும் நள்ளிரவு 12:28 மணிக்கு ஏற்பட்டது.
அதேசமயம், இரண்டாவது நிலநடுக்கம் ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில், 100 கி.மீ. மையத்தில் நள்ளிரவு 12:55 மணிக்கு நிகழ்ந்தது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நள்ளிரவு 12:28 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 4.4 , அட்சரேகை - 36.90 மற்றும் நீளம் - 71.95, ஆழம் - 80 கி.மீ., இடம் - ஃபைசாபாத்தில் இருந்து 126 கி.மீ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், “நள்ளிரவு 12.55 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு - 4.8, அட்சரேகை - 36.90 மற்றும் நீளம்: 71.65, ஆழம் - 140 கிமீ, இடம் - ஃபைசாபாத்தில் இருந்து 100 கி.மீ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் எந்தவித பாதிப்பும், உயிர்சேதமும் ஏற்படவில்லை. கடந்த திங்கள்கிழமை ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் இரு இடங்களில் ஏற்பட்ட நில நடுக்கம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.