ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநருக்கு இந்திய மதிப்பில் 44 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த முனாவர் பைரோஸ் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அல் ஐன் பகுதியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றி வரும் அவர், தொடர்ந்து லாட்டரிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.
இந்த 5 ஆண்டுகளில் அவருக்குப் பெரிதாக பரிசு எதுவும் விழாத நிலையில், சமீபத்தில் அவர், பிக் டிக்கெட் என்ற லாட்டரி வாங்கியிருந்தார்.
இந்நிலையில் இந்த லாட்டரிக்கான குலுக்கல் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது. இதில் முனாவருக்கு 20 மில்லியன் திராம்கள் பரிசுத்தொகை ஜாக்பாட்டாக விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.44 கோடியாகும். இதன் காரணமாக சாதாரண ஓட்டுநராக பணியாற்றி வந்த முனாவர், ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறியுள்ளார். ஆனாலும், இந்தத் தொகையை அவர் முழுமையாக சொந்தம் கொண்டாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த டிக்கெட்டை 30 பேருடன் சேர்ந்து முனாவர் வாங்கியுள்ளார். எனவே, தற்போது அவர் வெற்றி பெற்றுள்ள பரிசு 30 பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள முனாவர், நிச்சயமாக தான் இதை எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக முடிவு செய்யும் முடியாத அளவிற்கு தான் இன்ப அதிர்ச்சியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முனாவருக்கு ஏழு வயதில் மகள் ஒருவர் உள்ள நிலையில், அவரே இந்த டிக்கெட்டுக்கான எண்களைத் தேர்வு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த பரிசுத் தொகையை இந்தியாவிற்கு எடுத்து வந்து அவருக்குள்ள கடன்களை அடைப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
முனாவர் மட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரு லட்சம் திராம்கள் மதிப்பிலான பரிசுகள் விழுந்துள்ளது. எனவே, அவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!
அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!