தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிறவெறி கொடுமைகளை புகைப்படங்களாக பதிவு செய்த பிரபல புகைப்படக் கலைஞர் பீட்டர் மகுபேன் தனது 91வது வயதில் உயிரிழந்தார்.
தென்னாபிரிக்காவில் ’அப்பர்தீட்’ என்று அழைக்கப்படும் நிறவெறி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமலில் இருந்தது. கருப்பின மக்கள் பொது இடங்களுக்கு வரவும், பொது போக்குவரத்தில் பயணிக்கவும் தடை நிலவி வந்தது. மேலும் அரசு சலுகைகள் பலவும் மறுக்கப்பட்டதால் கருப்பின மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இதனை எதிர்த்து மகாத்மா காந்தி மற்றும் ஆப்பிரிக்காவின் காந்தி என்று அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா ஆகியோர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
குறிப்பாக நெல்சன் மண்டேலா நடத்திய போராட்டங்களால் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உலகில் மிக நீண்ட காலம் சிறையில் இருந்த தலைவர் ஆவார். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற நிறவெறி கொடுமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் புகைப்படங்களாக பதிவு செய்வதில் மிக முக்கிய பங்காற்றியவர் பீட்டர் மகுபேன். இவர் ’ட்ரம்’ என்ற பத்திரிகையில் பணியாற்றியவர். இதற்காக அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது பள்ளிக்காலம் முதலே நிறவெறியை சந்தித்து வளர்ந்த பீட்டர், அது தொடர்பான காட்சிகளை தனது புகைப்படம் வாயிலாக பதிவு செய்து உலகிற்கு எடுத்துரைத்தார். இதையடுத்து இந்த போராட்டங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகியது. ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் இந்த போராட்டம் தொடர்பாக பீட்டர் எடுத்த புகைப்படங்கள் உலகில் உள்ள பல்வேறு போர் சார்ந்த புகைப்படங்களை எடுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து வந்துள்ளன.
நிறவெறி போராட்டம் முடிவடைந்த பிறகு தென்னாப்பிரிக்காவில் உள்ள பழங்குடிகளின் வாழ்க்கை முறைகள் குறித்து தொடர்ந்து புகைப்படங்கள் வாயிலாக, பீட்டர் மகுபேன் பதிவு செய்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள கருப்பின தலைவர்கள் மற்றும் நிறவெறிக்கு எதிரான சர்வதேச அமைப்பினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.