கடந்த 2023-ம் ஆண்டு வரலாற்றில் இதுவரையில்லாத வெப்பமயமான ஆண்டாக தனது அவல சாதனையை படைத்துள்ளது. இது நடப்பு 2024-ம் ஆண்டிலும் தொடருமா என்ற கேள்வியும் உடன் எழுந்துள்ளது.
ஆவணபூர்வமாக புவியில் வெப்பநிலையை கண்காணிக்கத் தொடங்கிய காலம் முதல், முன்னெப்போதும் இல்லாத வெப்பமயமான ஆண்டாக 2023-ம் ஆண்டு வினோத சாதனை படைத்துள்ளது. அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆவணங்களுக்கு அப்பாலான பின்னணியில், கடந்த 1,25,000 ஆண்டுகளில் இல்லாத வெப்பத்தை 2023-ம் ஆண்டு பதிவு செய்திருப்பதாகவும் இன்னொரு ஆய்வு புலப்படுத்துகிறது. கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்து வெப்பநிலை விவரம் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனபோதும் ஆண்டின் முதல் 11 மாதங்களின் வெப்பநிலையே இத்தகைய சாதனைக்கு காரணமாகி இருக்கிறது.
மே மாதம் தொடங்கி தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு அதிகரித்த வெப்பநிலை என்றளவிலும், 2023-ம் ஆண்டு வேதனையான சாதனை படைத்திருக்கிறது. ஜனவரி-நவம்பர் இடையே உலகின் மேற்பரப்பு வெப்பநிலையானது, 1901-2000 என்ற நூறாண்டின் சராசரியான 57.2 டிகிரியை விட 2.07 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருந்தது. 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும், முந்தைய நூற்றாண்டை விட உலகளாவிய சராசரி வெப்பநிலையில் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த வகையில் உலக வெப்பநிலையை கண்காணிக்கத் தொடங்கியதில், முதல் 10 வெப்பமான ஆண்டுகளில் நாம் இருக்கிறோம்.
வலுவான எல் நினோவின் தாக்கம் காரணமாக 2016-ம் ஆண்டு, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வெப்பமயமான ஆண்டாக முன்னர் இருந்தது. பின்னர் 2020 அதை உடைத்தது. இந்த முந்தைய சாதனைகள் அனைத்தையும் தற்போதைய 2023 நொறுக்கியதில், இந்த தகிப்பு நடப்பு 2024-ம் ஆண்டு உட்பட அடுத்து வரும் ஆண்டுகளையும் தொடருமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 2023-ம் ஆண்டின் சாதனை வெப்பநிலைக்கு வளரும் எல்நினோ பாதிப்பு மட்டுமன்றி, கடலின் வெப்ப அலைகளும் காரணமாயின.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்தான எச்சரிக்கை, உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பு என்பது 1.5 - 2.0 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதனால் அதிகரிக்கும் கடல் மட்டத்தால் கடல்கோள் ஆபத்து, பயிர்கள் மற்றும் வனவிலங்கள் அழிவு என பாதிப்புகள் தொடர இருக்கின்றன. இந்த வகையில் உலகின் வெப்பநிலை சாதனை நடப்பு 2024 மட்டுமல்ல, மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடரவும் வாய்ப்பாகிறது. இவ்வாறு 2023 - 2027 என்ற ஐந்தாண்டு காலப்பகுதியானது, இதுவரை இல்லாத வகையில் பதிவுசெய்யப்பட்ட உலகின் வெப்பமான ஐந்தாண்டாக அச்சுறுத்த காத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?
புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட்!
ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!
அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!