2024-ல் அணு ஆயுதப் போர்... ஆயத்தமாக கிம் ஜாங் உன் உத்தரவு


ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத தளவாடங்கள் புடைசூழ வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது புத்தாண்டு செய்தியின் அங்கமாக, 2024-ல் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என கணித்திருப்பதோடு அதனை எதிர்கொள்ள தயாராகுமாறு தனது நாட்டினருக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.

புதிய ஆண்டு பிறப்பதை முன்னிட்டு உலகத் தலைவர்கள் பலரும் தங்களுடைய புத்தாண்டு செய்தியை வெளியிட்டு வருகின்றனர். புதிய ஆண்டு குறித்தான நேர்மறையான செய்திகளும், வாழ்த்துகளுமே அதில் நிரம்பியிருக்கும். விதிவிலக்காக வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன், இந்த வருடம் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என கணித்திருக்கிறார்.

நீர்மூழ்கி பின்னணியில் கிம் ஜாங் உன்

கொரிய தீபகற்பத்தில் பங்காளி தேசமான தென்கொரியாவுடனான வடகொரியாவின் மோதல் உச்சம் பெற்றுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதரவுடன் தங்களுக்கு அச்சுறுத்தலாகும் வகையில் தென்கொரியா வளர்ந்து வருவதாக வடகொரியா கவலை கொண்டிருக்கிறது.

தென்கொரியா தேசம் வளர்ச்சியின் அடையாளமாக மேம்பட்டு வர, பகைமை உணர்வு காரணமாக ஆயுத குவிப்புக்கே அதிகம் செலவிட்டதில் வடகொரியா நலிவடைந்து வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் குன்றியதோடு, மனித உரிமைகளும் வடகொரியாவில் கேள்விக்குறியாகி வருகின்றன.

கடந்த ஆண்டுகளின் தொடர்ச்சியாக கொரிய தீபகற்பத்தில் 2023-ம் ஆண்டும் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பகைமை தேசங்களை கண்காணிக்கும் நோக்கில், உளவு செயற்கைக்கோளினை வெற்றிகரமாக ஏவியதாக வடகொரியா அறிவித்தது. மேலும் பல்வேறு ஏவுகணைகள் பரிசோதனைகளை மேற்கொண்டு தென்கொரியா மற்றும் ஜப்பானை அலற வைத்தது வடகொரியா. போதாக்குறையாக தங்களது உளவு செயற்கைக்கோள் வாயிலாக, அமெரிக்காவின் வெள்ளைமாளிகை, பென்டகன் உள்ளிட்ட அந்நாட்டின் பாதுகாப்புக்குரிய இடங்களை கண்காணித்து வருவதாகவும் வடகொரியா அறிவித்தது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

இத்தனை களேபரங்களின் மத்தியில், நாட்டு மக்களுக்கான தனது புத்தாண்டு செய்தி மற்றும் சபதத்தின் அங்கமாக புதிய குண்டு ஒன்றை வீசியிருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். ”இதுவரையில்லாத வகையில் 2023-ம் ஆண்டில் வடகொரியாவுக்கான பகை நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் தற்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர் வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது. எனவே, 2024-ல் மேலும் புதிய 3 ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் ஏவுவதோடு,ராணுவ நோக்கத்திலான ட்ரோன்கள், நீர்மூழ்கிகள், அணு ஆயுதங்கள் ஆகியவற்றை வடகொரியா அதிகம் தயாரிக்க வேண்டும்” என அறிவித்துள்ளார்.

x