உலகில் முதல் நாடுகளாக கிரிபாட்டி தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 4:30 மணியளவில் நியூசிலாந்தில் 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறந்துள்ளது. இதே போல் சர்வதேச நேர எல்லையின் அருகில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவுகளிலும் நீயுசிலாந்தை காட்டிலும் சில நொடிகளுக்கு முன்பாக புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக வான வேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர்.
ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும்,பல்வேறு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களிலும், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு 12 மணி அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்க உள்ளதை அடுத்து போலீஸார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 1 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அதன் பிறகு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிக வேகத்தில் சாலைகளில் இயக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் வாகனங்கள் இயக்குவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீஸார் மேற்கொண்டுள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டை ஒட்டி தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், இரவு நேர சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டு தலங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.