பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் அனுப்பிய கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை அர்ஜெண்டினா நாட்டின் பிரதமர் ஜேவியர் மிலேய் மறுத்துள்ளார். முன்னதாக 6 நாடுகளுக்கு பிரிக்ஸ் அமைப்பில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதன் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. அப்போது வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் அடுத்த ஆண்டு முதல் அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய ஆறு நாடுகள் புதிதாக இணைப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பில் மேற்குலக வணிக நாடுகளை எதிர்கொள்ள கூட்டணியைப் பலப்படுத்துநோக்கில் இன்னும் 6 நாடுகளுக்குக் கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை ஆகஸ்டில் அந்த கூட்டமைப்பின் தலைவர்கள் விடுத்திருந்தனர். இப்போது அந்த அழைப்பை ஆர்ஜென்டீனா மறுத்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களுக்குத் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து, 'இதனை உரிய நேரமாகத் தங்கள் நாடு கருதவில்லை' என ஜேவியர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரவாதக் கட்சியைச் சேர்ந்த மிலேய்,ஏற்கெனவே கோலோச்சி வந்த பாரம்பரிய கட்சிகளைத் தோற்கடித்து கடந்த மாதம் ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தது முதல் அவர் அமெரிக்காவுக்கு ஆதரவான தீவிர நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்.
அவர் சீனா மற்றும் பிரேசில் நாடுகளோடு வியாபார உறவுகளைத் துண்டித்து கொள்ளவிருப்பதாக தேர்தல் பரப்புரையில் கூறியிருந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வந்தபிறகு சமரச போக்கைக் கடைபிடித்து வருகிறார். அதேபோல பிரிக்ஸில் இணைவதில்லை என்பதை அவர் தனது பிரசாரத்திலேயே திட்டவட்டமாக குறிப்பிட்டார். புவிசார் அரசியல் என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் பொருந்துவதே தவிர, கம்யூனிஸ்ட் கூட்டணியோடு அல்ல என்று மிலே தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆகஸ்டு மாதம் நடந்த கூட்டத்தில் பிரிக்ஸ் விரிவாக்கத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, "பிரிக்ஸ் அமைப்பில் தற்போது இந்தியா, ரஷ்யா, பிரேசில் உட்பட 5 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைந்து பெரிய அளவிலான அமைப்பாக மாறவேண்டும் என்பது எங்களது விருப்பமாக உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடுகளை அதிகரிப்பதற்கு இந்தியா தனது முழு ஆதரவை இங்கு தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரத்தில் தற்போது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கருத்தொற்றுமையுடன் இந்த விரிவாக்கம் நடைபெறவேண்டும்” என்று கூறியிருந்தார்.