உலக அளவில் மக்கள் தொகை அடுத்த ஆண்டின் தொடக்க நாளான 2024 ஜனவரி 1ம் தேதியன்று 800 கோடியை தாண்டிவிடும் என அமெரிக்காவில் இருந்து வரும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 'உலக மக்கள் தொகை இந்த ஆண்டு 7.5 கோடி அதிகரித்திருக்கிறது. புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்திருக்கும். எனினும், நிகழாண்டு உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்பு மற்றும் 2 இறப்புகளை எதிர்பாா்க்கலாம். அமெரிக்காவின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு 17 லட்சம் அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் அது 33.58 கோடியாக இருக்கும். அந்த நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் உலக சராசரியில் பாதியாக 0.53 சதவீதம் மட்டுமே உள்ளது.
இதேபோக்கு நீடித்தால், 2020 முதல் 2030 வரையிலான 10 ஆண்டுகளே அமெரிக்க வரலாற்றில் குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட காலகட்டமாக இருக்கும். அதன்படி 2030- ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், அமெரிக்காவின் மக்கள் தொகை வளா்ச்சி 4 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1960-2000 காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது உலக மக்கள் தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் என கருதப்படுகிறது. ஆனால் கடந்த நவம்பர் 15 ம் தேதியே உலகின் மக்கள் தொகை 800 கோடியை கடந்திருக்கும் என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை விகிதம் குறைவான சதவீதத்திலேயே உயர்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...