இஸ்ரேல் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7ம் தேதி நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசாவில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இதன் காரணமாக காசாவே அழிவுற்ற நிலைக்கு சென்றதுடன், 21,500 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 9 ஆயிரம் பேர் குழந்தைகள். மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் என அனைத்து இடங்களையும் சிதைத்து வருகிறது இஸ்ரேல்.
இந்த சூழலில்தான் இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே நடைபெற்றுவரும் இந்தப் போரின் நோக்கம் காசாவிலுள்ள பாலஸ்தீன மக்களை அழிப்பதுதான் எனத் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. காசாவில் இஸ்ரேல் பல போர் குற்றங்களை நிகழ்த்துவதாக பல்வேறு தரப்புகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்ரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. பொதுமக்களைப் பாதுகாக்குமாறு அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்திவந்த நிலையில், காசாவில் இதுவரை 21,500-க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் அப்பாவி பாலஸ்தீனர்கள் மட்டுமல்லாமல், ஹமாஸ் அமைப்பால் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஐ.நா அமைப்பு, உலகநாடுகளின் போர்நிறுத்த கோரிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி தீவிரமாக தாக்குகிறது இஸ்ரேல்.
இதையும் வாசிக்கலாமே...