போருக்கு தயாராகுங்கள்... கிம் ஜாங் உன் திடீர் அறிவிப்பு; கொரிய தீபகற்பத்தில் பதற்றம்


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

போருக்கு தயாராக இருக்குமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சியில் வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் ஜப்பான், தென் கொரியா நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. உலக நாடுகள் பலவும் தென்கொரியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனிடையே நாட்டின் பாதுகாப்பு எனக் கூறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் தனது ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவி இருந்த வடகொரியா, தனது நீண்ட தூரம் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஹுவாசாங்-18 என்ற ஐசிபிஎம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தது. இதனிடையே அணு ஆயுத தயாரிப்பு குறித்து வெளிப்படையாக அறிவித்தால் பொருளாதார தடைகளை நீக்குவதாக ஐநா அவையின் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது ராணுவம் தயார் நிலையில் இருக்குமாறு அறிவித்துள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் உன்

இதேபோல் ராணுவத்தின் சார்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள், அணு ஆயுதங்கள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்பு காரணமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த மாதம் தென்கொரியாவின் பூசான் நகருக்கு அமெரிக்காவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல் வருகை தந்திருந்தது. மேலும் நீண்ட தூரம் வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் விமானங்களின் சோதனையும் நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு, உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!

x