கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய உலைகளை அமைப்பது தொடர்பான சில மிக முக்கியமான" ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளதாக என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

ரஷ்யாவுக்கு 5 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சென்றுள்ளாா். இந்தப் பயணத்தின்போது அவர் ரஷ்ய துணைப் பிரதமரும், தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சருமான டேவிட் மான்டுரோவ், வெளியுறவு அமைச்சா் சொஜி லாவ்ரோவ் ஆகியோரை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து, பொருளாதார விவகாரங்கள், பல்வேறு இருதரப்பு மற்றும் சா்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

பல மேற்கத்திய நாடுகளில் கச்சா எண்ணெய் பற்றிய கவலை அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவில் அதிகரித்துள்ளது. உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டதற்கும் இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்தச் சிக்கலைப் பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே தீா்வு காண முடியும் எனவும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் இந்திய வெளியுறவு அமைச்சரின் ரஷ்ய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் உத்தி துறை சாா்ந்த முன்னணி பிரதிநிதிகளை ஜெய்சங்கா் சந்தித்துக் கலந்துரையாடினாா். இதுகுறித்து பேசிய ஜெய்சங்கா், 'இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு தொடா்ந்து சிறப்பான பாதையில் பயணிக்கிறது. இதற்கு புவி அரசியல் மற்றும் உத்தி சாா்ந்த ஒருங்கிணைப்பு பெரிதும் உதவுகிறது. அனைத்து நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், உலக அரசியலில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மட்டுமே நிலையானது.

பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில், நாடுகள் தங்களுக்கு "அதிக அளவு" நம்பிக்கை உள்ளவர்களுடன் மட்டுமே ஒத்துழைக்கின்றன. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவு பல வழிகளில் விதிவிலக்கானது.. கடந்த 60, 70, 80 ஆண்டுகால முக்கிய நாடுகளின் அரசியலைப் பார்த்தால், அவர்கள் தங்கள் உறவுகளைக் கொண்டிருந்தனர், ஆனால் இந்த உறவுகள் அனைத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஆனால் இந்தியா ரஷ்ய உறவு நிலையானது” என்றாா்.

செவ்வாய் கிழமையன்று துணைப் பிரதமரும், தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சருமான டேவிட் மான்டுரோவுடன் ஜெய்சங்கர் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய உலைகளை அமைப்பது தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான சந்திப்பிற்குப் பிறகு, மருந்துகள், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் வாசிக்கலாமே...

x