பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. சமீபகாலமாக கோழிப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் 'சோயாபீன்ஸ்' வரத்து குறைந்ததால், அந்நாட்டில் முட்டையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசலில் ஆரம்பித்து சாதாரண டீ வரை விலை மளமளவென உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வே பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த சூழலில்தான் பாகிஸ்தானில் முட்டையின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. அதாவது 30 டஜன் (ஒரு டஜன் என்பது 12 முட்டை) கொண்ட முட்டையின் விலை ரூ.10,500ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்ந்துள்ளது. ஒரு டஜன் முட்டைகளை ரூ.360க்கு விற்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கூறியிருந்தாலும், சில்லரை வியாபாரிகள் ஒரு டஜன் முட்டையை ரூ.389க்கு விற்கின்றனர். அதாவது ஒரு முட்டையின் விலை ரூ.32.40 வரை எட்டியுள்ளது.
இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் பேசுகையில், ' பணவீக்கம் காரணமாக சோயாபீன்ஸ் வரத்து குறைந்துள்ளது. எனவே பாகிஸ்தான் அரசு சோயாபீன்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே கோழி முட்டை சமீப நாட்களாக அதிகரித்து வருவதால், மக்கள் முட்டை வாங்கி சமைத்து சாப்பிட பயப்படுகிறார்கள். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளும் அதிகரித்து வருகின்றன' என்றார்
இதையும் வாசிக்கலாமே...