பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நடிப்பில் வெளியான கிறிஸ்துமஸ் சிறப்பு வீடியோ ஒன்று, கிறிஸ்துமஸ் கடந்த பிறகும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனானதன் மூலம் இந்தியாவுடனான பந்தம் கூடியவர். இவற்றால் இந்தியர்கள் மத்தியில் ரிஷி சுனக் அணுக்கமாக பாவிக்கப்படுகிறார். பதவியேற்றது முதலே துடிப்பான இளம் பிரதமராக பிரிட்டனில் வளைய வருகிறார். இவற்றுக்கு அப்பால் சமூக ஊடகப் பதிவுகள் வாயிலாகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டின் பிரபலமான ’ஹோம் அலோன்’ திரைப்பட வரிசை பாணியில், அவர் வெளியிட்ட இந்த வீடியோ பிரிட்டனுக்கு அப்பாலும் கவனம் பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக குடும்பமே விமானமேற, வீட்டுக்குள் தனித்து சிக்கும் சிறுவன் சந்திக்கும் காமெடி சவால்களே ஹோம் அலோன் திரைப்படம்.
இந்த ’ஹோம் அலோன்’ பாணியில் ரிஷி சுனக்கின் வீடியோவும் விரிகிறது. பிரதமருக்கான தனது பிரத்யேக இல்லத்தில் தனித்திருக்கிறார் ரிஷி சுனக். சற்றே அலுப்புடன் தனித்து உண்கிறார்; தனக்கான அலுவலை பார்க்கிறார்; பொழுதினை விரட்ட சிறுபிள்ளை போல விளையாடி கழிக்கிறார். இறுதியில் தனக்கு வரும் தொலைபேசி அழைப்பை செவிமெடுப்பவர், “உங்களுக்கு தவறான எண் கிடைத்துள்ளது ஹாரி” என்று போனை வேகமாக வைக்கிறார்.
ஹாரி என்ற பத்திரிக்கையாளர் பிரதமர் ரிஷி சுனக்கின் தனிப்பட்ட அலைபேசி எண்ணை பொதுவெளியில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அதனை கிணடலடிக்கும் வகையிலும், கிறிஸ்துமஸ் பின்னணியிலான ’ஹோம் அலோன்’ திரைப்படத்தின் பாதிப்பிலும் வெளியாகி உள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த ஹாரி என்பது இங்கிலாந்து இளவரசர் ஹாரியைக் குறிக்கும் என்பதாகவும் நெட்டிசன்கள் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
பிரிட்டன் பிரதமராக உச்ச பொறுப்பை வகித்து வந்த போதிலும் மெய்யாலுமே ரிஷி சுனக், தனித்து விடப்பட்டவராகவும், பெரும் சவால்களை தனியே எதிர்கொள்பவராகவும் காணப்படுகிறார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தடுமாற்றம், எதிர்க்கட்சியினரின் அதிகரிக்கும் எதிர்ப்புகள், சொந்தக் கட்சியினரின் அதிருப்திகள் உள்ளிட்டவற்றால் தனித்து விடப்பட்டவராக போராடி வருகிறார் ரிஷி சுனக். அவற்றை பிரதிபலிக்கும் வகையிலும், அவரது இந்த வீடியோ அமைந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...