இந்திய கடற் பகுதியில் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கடலில் எங்கு பதுங்கியிருந்தாலும் பிடிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று 'ஐஎன்எஸ் இம்பால்' போர்க்கப்பல் துவக்க விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 'ஐஎன்எஸ் இம்பால்' போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
இந்த விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
வணிக கப்பல்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து இந்திய கடற்பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும், கடலில் எங்கு பதுங்கியிருந்தாலும், அவர்களைப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரபிக்கடலில் எம்.வி.கெம் புளூட்டோ கப்பல் மீது சமீபத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலையும், சில நாட்களுக்கு முன்பு செங்கடலில் 'எம்.வி.சாய்பாபா' மீது நடந்த தாக்குதலையும் இந்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது" என்றார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதற்குப் பிறகு, செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் கப்பல்களையும், அங்கிருந்து வெளியே வரும் கப்பல்களையும், ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இச்சூழலில் எம்.வி.சாய்பாபா, எம்.வி.கெம் புளூட்டோ கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு கப்பல்களை தாக்கியவர்கள் தேடி பிடிக்கப்படுவார்கள் என, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...